நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் 78ஆவது சுதந்திர தின விழா மற்றும் உத்தியோகத்தர்களுக்கான புதிய சீருடை அறிமுக நிகழ்வு
இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் 78ஆவது சுதந்திர தினத்தினை முன்னிட்டு நாவிதன்வெளி பிரதேச செயலகம் ஏற்பாடு செய்திருந்த பிரதான சுதந்திர தின நிகழ்வு மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கான 2026 ஆம் ஆண்டிற்கான அலுவலக சீருடை அறிமுக நிகழ்வு ஆகியன பிரதேச செயலக வளாகத்தில் 2026 பெப்ரவரி 04 ஆந் திகதியன்று பிரதேச செயலாளர் திருமதி. ராகுலநாயகி சஜிந்ரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

பிரதேச செயலாளரினால் தேசிய கொடி ஏற்றப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன் தேசிய கீதமும் ஒலிக்கச் செய்யப்பட்டது. இலங்கை திருநாட்டின் இன மத பல்லினத்தன்மையை பிரதிபலிக்கும் வகையில் கலாசார உடையில் பாடசாலை சிறுவர்களும் பங்குபற்றினர். சுதந்திர தினம் தொடர்பில் பிரதேச செயலாளரினால் விசேட உரை நிகழ்த்தப்பட்டது. மேலும், மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் விசேட தேவையுடைய நபர்களுக்கான உபகரணங்களை வழங்கி வைக்கும் வேலைத்திட்டத்தின் ஊடாக நாவிதன்வௌி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட பயனாளிக்கான சக்கர நாற்காலி வழங்கி வைக்கும் நிகழ்வும் இடம்பெற்றது. மேலும், சென்ற வருடம் இடம்பெற்ற வௌ்ள அனர்த்த நிலைமையின் காரணமாக நாவிதன்வௌி கிட்டங்கி வீதியின் போக்குவரத்து நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டிருந்தது. இதன்போதான படகு போக்குவரத்து நடவடிக்கைக்கான தன்னார்வ உதவியினை வழங்கிய சவளக்கடை கிராம அலுவலர் பிரிவினை சேர்ந்த திரு. சாந்தராசா தனுஜன் அவர்களுக்கான பாராட்டுப் பத்திரம் மற்றும் நினைவுச் சின்னம் ஆகியனவும் பிரதேச செயலாளரினால் வழங்கிவைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் நாவிதன்வௌி பிரதேச செயலக கணக்காளர் திரு. க. றிஸ்வி யஹ்சர், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் திருமதி. திலகராணி கிருபைராஜா, நிருவாக உத்தியோகத்தர் திரு. O. G. K. குசுமிந்த, நிருவாக கிராம உத்தியோகத்தர் திரு. மனோஜ் இந்ரஜித், சமுர்த்தி தலைமையக முகாமையாளர் திரு. செ. சிவம் ஆகியோரும் சகல பிரிவுகளின் பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள், அலுவலக, வௌிக்கள உத்தியோகத்தர்கள், கிராம அலுவலர்கள், சமூக வலுவூட்டல் உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், அலுவலக உத்தியோகத்தர் சேவை உத்தியோகத்தர்கள் மற்றும் ஏனைய சகல உத்தியோகத்தர்களும் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட சீருடையுடன் கலந்து கொண்டனர்.
இதேவேளை பிரதேச செயலாளரின் வழிகாட்டலில் நாவிதன்வெளி பிரதேச செயலக பிரிவிலுள்ள கிராம அலுவலர் பிரிவுகளிலும் வெளிக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் பொது மக்களின் பங்குபற்றுதலுடன் சுதந்திர தின நிகழ்வுகள் இடம்பெற்றன.















